தற்போதைய செய்திகள்

இதுதான் சரியான பழிக்குப்பழி- கிரிக்கெட்டில் அபூர்வ நிகழ்வு
  • 12th February 2018

ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 9-ந்தேதி முதல் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் ரஹ்மத் ஷா சதத்தால் 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 333 ரன்கள் குவித்தது.

பின்னர் 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி 34.4 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆப்கானிஸ்தான் 154 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரஷித் கான் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

இந்நிலையில் 2-வது ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே பிராண்டன் டெய்லரின் (125), சிகந்தர் ரசா (92) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 333 ரன்கள் குவித்தது.

பின்னர் 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களம் இறங்கியது. அந்த அணி 30.1 ஓவரில் 179 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஜிம்பாப்வே 154 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே கேப்டன் க்ரீமர் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் எவ்வளவு ரன்கள் எடுத்து, ஜிம்பாப்வேயை எவ்வளவு ரன்னில் சுருட்டி வெற்றி பெற்றதோ, அதேபோல், 2-வது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அதே ரன்களை எடுத்து, ஆப்கானிஸ்தானை அதே ரன்னில் சுருட்டி வெற்றி பெற்றது.

இதைத்தான் சரியான பழிக்குப்பழி என்பார்களோ?.

இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஆட்டம் நாளை நடக்கிறது.

comments powered by Disqus