தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் - திரிபுராவில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை
  • 11th February 2018

திரிபுராவில் உள்ள 60 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.க. 51 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியாக திரிபுரா மக்கள் முன்னேற்ற கழகம் 9 இடங்களிலும் போட்டியிடுகின்றன. 
 
இத்தேர்தலுக்கான அறிக்கையை மத்திய நிதித்துறை மந்திரியும், பா.ஜ.க. கட்சியை சேர்ந்த மூத்த தலைவருமான அருண் ஜெட்லி இன்று வெளியிட்டார். அப்போது பேசிய அவர் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும், ஒரு பட்டப்படிப்பு கல்லூரி அமைக்கப்படும் என கூறினார். மாநிலத்தில் பல்நோக்கு மருத்துவமனைகளும், எய்ம்ஸ் மருத்துவமனை போன்ற மருத்துவமனைகளும் அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
 
இந்த தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால் அனைத்து இளைஞர்களுக்கும் இலவச ஸ்மார்ட்போன் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தில் உணவு பதப்படுத்தும், மூங்கில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஜவுளி போன்ற துறைகளுக்கு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் வேலைவாய்ப்பு, பெண்களுக்கு பட்டப்படிப்பு வரை இலவச கல்வி, மாநில அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதிய கமிஷன் சம்பளம் ஆகியவையும் அளிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

comments powered by Disqus