தற்போதைய செய்திகள்

வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுங்கள் - மகிந்த ராஜபக்ச
  • 11th February 2018

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்ற நிலையில் இதுவரை வெளியான முடிவுகளின்படி 141 சபைகளை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் தோல்வியடைந்த பிரிவினருக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாத வகையில் வெற்றிக் கொண்டாட்டத்தை மேற்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் தனது வழிநடத்தலின் கீழ் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றிபெற்றிருப்பதால் அதுகுறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டபோது இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“வெற்றியாளர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் களமிறங்கி வெற்றிபெற்ற அதேபோல சுயாதீனமாக போட்டியிட்டு எமக்கு ஆதரவளித்த பிரிவினர் உட்பட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேபோல இந்த வெற்றிக்காக அர்ப்பணித்து சேவையாற்றிய அனைவருக்கும் எனது நன்றியை கூறுகின்றேன். இராபகல் பாராமல் பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில்தான் அவர்கள் தமது செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர். விசேடமாக வெற்றிபெற்ற தரப்பினரிடம் ஒன்றை கேட்டுக்கொள்கின்றேன்.

தோல்வியடைந்த பிரிவினருக்கு எந்த இடையூறுகளும் ஏற்படாத வகையில் வெற்றிக் களிப்பை கொண்டாடும்படி கோருகிறேன். எமக்கு அவர்கள் என்ன செய்திருந்தாலும் நாங்கள் ஒரு முன்னுதாரணத்தை வழங்க வேண்டும். எனவே எமது வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடும்படி கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.

comments powered by Disqus