தற்போதைய செய்திகள்

டி20 முத்தரப்பு தொடரில் இங்கிலாந்தை மீண்டும் ஓடவிட்டது ஆஸ்திரேலியா
  • 10th February 2018

டி20 முத்தரப்பு தொடரின் 3-வது ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மீண்டும் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி சார்பில் பட்லர் 46 ரன்னும், பில்லிங்ஸ் 29 ரன்னும் சேர்த்தனர். ஆஸ்திரேலியா அணி சார்பில் கேன் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டும், ஸ்டேன்லேக் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், ஷார்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வார்னர் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஷார்ட் உடன் கிறிஸ் லின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கிறிஸ் லின் 19 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். லின் அவுட்டாகும்போது ஆஸ்திரேலியா 5.3 ஓவரில் 51 ரன்கள் எடுத்திருந்தது.

3-வது விக்கெட்டுக்கு ஷார்ட் உடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். ஷார்ட் நிதானமாக விளையாட மேக்ஸ்வெல் அதிரடி காட்டினார். அவர் 26 பந்தில் 39 ரன்கள் அடித்தார்.

4-வது விக்கெட்டுக்கு ஷார்ட் உடன் ஆரோன் பிஞ்ச் ஜோடி சேர்ந்தார். பிஞ்ச் 5 பந்தில் தலா இரண்டு பவுண்டரி, சிக்சருடன் 20 ரன்கள் சேர்க்க ஆஸ்திரேலியா 14.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 33 பந்துகள் மீதமுள்ள நிலையில் அட்டகாசமான வெற்றியை ருசித்தது. கிறிஸ் லின் 36 ரன்னுடனும், பிஞ்ச் 20 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.

ஏற்கனவே நியூசிலாந்து, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால் மூன்று வெற்றிகளுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை வருகிற 16-ந்தேதி எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஆக்லாந்தில் நடக்கிறது.

நியூசிலாந்து- இங்கிலாந்து இடையிலான முதல் லீக் வெலிங்டனில் 13-ந்தேதியும், 2-வது லீக் ஆட்டம் ஹாமில்டனில் 18-ந்தேதியும் நடக்கிறது.

 

comments powered by Disqus