தற்போதைய செய்திகள்

அமெரிக்காவின் அச்சுறுத்தலை கவனத்தில் கொள்ள வேண்டும் - கிறிஸ்டியா ஃபிறீலான்ட்
  • 13th January 2018

வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கையிலிருந்து விலகுவதற்கான அமெரிக்காவின் அச்சுறுத்தலை தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும் என கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் தெரிவித்துள்ளார்.

மேற்படி உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதற்கு அமெரிக்கா விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த கிறிஸ்டியா ஃபிறீலான்ட், முத்தரப்பு உடன்படிக்கையை புதுப்பிப்பதற்கான ஆக்கபூர்வமாக ஆலோசனைகளை ஒட்டாவா தயாரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது, அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையிலிருந்து விலகி நடக்க வேண்டும் என்று கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க நிர்வாகம் பலமுறை கூறியுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய ஃபிறீலான்ட், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது நாட்டுக்கு சாதகமான முறையில் குறித்த உடன்படிக்கை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே அமெரிக்கா ஒரு தெளிவான நிலைப்பாட்டில் இருந்துள்ளது. இது தொடர்பாக எமது அயல்நாட்டினருடன் நாம் பேசவேண்டும் என்று நினைக்கிறேன். இதனை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுடன் அனைத்து சந்தர்ப்பத்திலும் கனடா தயாராகவே உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

comments powered by Disqus