தற்போதைய செய்திகள்

தென்ஆப்பிரிக்கா அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? 2-வது டெஸ்ட் நாளை தொடக்கம்
  • 12th January 2018

வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் சூப்பர் ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் நாளை (13-ந்தேதி) தொடங்குகிறது.

முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுத்து தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்யுமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஆனால் அது மிகவும் சவாலானது.

தென்ஆப்பிரிக்கா ஆடுகளங்கள் அதிவேகமாக பவுன்ஸ் ஆகிறது. இதனால் அந்த அணி வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வதில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறுகிறார்கள். மேலும் செஞ்சூரியன் ஆடுகளமும் இதைவிட அதிகமாக வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும். இந்த மைதானத்தில் இந்தியா ஒரே டெஸ்டில் ஆடி தோற்று இருந்தது.

தென்ஆப்பிரிக்கா செஞ்சூரியனில் 2 டெஸ்டில் மட்டுமே (மொத்தம்-22, வெற்றி-17, டிரா-3) தோற்று இருக்கிறது.

முதல் டெஸ்டில் வீரர்கள் தேர்வு விமர்சனத்தை ஏற்படுத்தியது. துணை கேப்டனான ரகானேயை தேர்வு செய்யாதது மிகப்பெரிய கேள்வியை உண்டாக்கியது. இதேபோல முழு உடல் தகுதி இல்லாத தவானின் இடம் குறித்தும் விமர்சனம் எழுந்தது.

இதனால் நாளைய டெஸ்டில் வீரர்கள் தேர்வு கேப்டன் வீராட்கோலிக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கும். ரகானே இடம் பெறும்பட்சத்தில் ரோகித் சர்மா நீக்கப்படலாம். விர்த்திமான் சகா இடத்தில் பார்த்தீவ் பட்டேல் சேர்க்கப்பட்டால் அவர் தொடக்க வீரராக களம் இறங்கலாம். அப்படி நிகழ்ந்தால் ரோகித்சர்மா மிடில் ஆர்டரில் தக்க வைக்கப்படுவார். தவான் கழற்றிவிடப்படலாம்.

ஹர்த்திக் பாண்ட்யா மட்டும் தான் பேட்டிங்கில் தாக்கு பிடித்து ஆடினார். பந்துவீச்சிலும் சாதித்தார். மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பி விட்டனர். பந்துவீச்சு மட்டுமே சிறப்பாக இருந்தது.

தொடர்ச்சியாக டெஸ்ட் தொடரை இழக்காமல் சாதித்து வரும் இந்திய அணி அதை நீட்டித்துக் கொள்ள இந்த டெஸ்டில் தோல்வியை தவிர்ப்பது அவசிமானது.

முதல் டெஸ்டில் வென்றதை போலவே இந்த டெஸ்டிலும் வென்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்துடன் டுபெலிசிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா அணி இருக்கிறது.

அந்த அணியின் பேட்டிங்கில் டிவில்லியர்சும், பந்துவீச்சில் பிலாண்டரும் நல்ல நிலையில் உள்ளனர். மேலும் ரபடா, மார்னே மார்கல் ஆகியோரும் வேகப்பந்தில் சிறப்பாக இருக்கிறார்கள்.

இந்த டெஸ்டிலும் தென்ஆப்பிரிக்கா ஆதிக்கம் செலுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி டென் 1 மற்றும் சோனி டென் 3 டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்திய வீரர்:- வீராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, ரகானே, ஹர்த்திக் பாண்ட்யா, விர்த்தி மான் சகா, அஸ்வின், புவனேஷ் குமார், உமேஷ் யாதவ், இஷாந்த்சர்மா, முகமது ‌ஷமி, பும்ரா, தவான், ரோகித் சர்மா, ஜடேஜா, பார்த்தீவ் பட்டேல்.

தென் ஆப்பிரிக்கா:- டுபெலிசிஸ் (கேப்டன்), எல்கர், மார்கிராம், டிவில்லி யர்ஸ், ஹசிம் அம்லா, பவுமா, குயின்டன், டிகாக், பிலாண்டர், ரபடா, மார்னே மார்கல், கேசவ்மகராஜ், கிறிஸ்மோரிஸ், புருயின், பெலுகுவாயோ, ஆலிவர், நிகிடி.

comments powered by Disqus