தற்போதைய செய்திகள்

ராகுல்காந்தி காட்டிய வழியில் மம்தாவும் ஆன்மிக அரசியல்
  • 9th January 2018

குஜராத் மாநில சட்ட சபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தபோது வெற்றிக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் புதிய பிரசார யுக்தியை கையாண்டார்.

குஜராத்தில் உள்ள இந்து கோவில்களுக்கு சென்று வழிபட்டு விட்டு ராகுல் பிரசாரம் செய்தார். 25 பழமையான இந்து ஆலயங்களுக்கு ராகுல் சென்றிருந்தார்.

இந்து கோவில்கள் மீது ராகுல் திடீர் பாசம் காட்டுவதாக பா.ஜ.க. தலைவர்கள் விமர்சனம் செய்தனர். ஆனால் மக்கள் மத்தியில் இதற்கு வரவேற்பு கிடைத்தது. அவர் சென்ற 25 கோவில் உள்ள தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

குஜராத்தில் ஆளும் பா.ஜ.க. வுக்கு இணையாக காங்கிரஸ் வெற்றிகளை குவித்து வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளதற்கு, ராகுல் காந்தி இந்து கோவில்களுக்கு சென்றதே காரணம் என்று கூறப்படுகிறது. அடுத்து கர்நாடகா சட்டசபை தேர்தலிலும் இதே பாணியை கடை பிடிக்கப் போவதாக ராகுல் கூறியுள்ளார்.

ராகுலின் இந்த புதிய பாணியை உன்னிப்பாக கவனித்து வந்த மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தனது அரசியல் பயணத்தையும் ராகுல் பாணியில் மாற்றிக் கொள்ள முடிவு செய்துள்ளார். இதுவரை மம்தா பானர்ஜி மதரீதியாக எந்த செயல்பாடுகளிலும் ஈடுபட்டதில்லை.

மாறாக தசரா, விநாயகர் சதுர்த்தி, துர்கா பூஜை நாட்களில் மம்தா எதிரான நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வந்தார். இது இந்துக்கள் மத்தியில் மம்தா மீது சற்று வெறுப்பை உருவாக்கி இருந்தது. இதே நிலை நீடித்தால் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. அதிக வெற்றிகளை பெறும் என்று உளவுத்துறை மம்தா பானர்ஜியிடம் கூறியது.

இதைத் தொடர்ந்து மம்தாவும் ஆன்மிக அரசியலுக்குள் வந்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள பிர்பும் மாவட்டத்தில் புரோகிதர்கள் மாநாடு ஒன்றை அரசு சார்பில் நடத்த மம்தா உத்தரவிட்டுள்ளார். அந்த மாநாட்டில் கோவில் பூசாரிகள் கவுரவிக்கப்பட உள்ளனர்.

மேற்கு வங்கத்தில் வரும் 14, 15-ந்தேதிகளில் கங்கா சாகர் மேளா நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழாவில் மம்தா பானர்ஜி கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

இவை தவிர மாநிலத்தில் உள்ள பழமையான இந்து ஆலயங்களை சீரமைத்து திருப்பணிகள் செய்யவும் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். இந்துக்கள் வாக்கு பா.ஜ.க. பக்கம் சரிவதைத் தடுக்க அவர் மேலும் சில இந்து ஆதரவு நடவடிக்கைகளை எடுப்பார் என்று தெரிகிறது.

comments powered by Disqus