தற்போதைய செய்திகள்

மக்கள் போராட்டம் எதிரொலி - பாகிஸ்தான் சட்ட மந்திரி ராஜினாமா
  • 27th November 2017

பாகிஸ்தானில் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்பில் சத்திய பிரமாணம் செய்யும்போது அதில் சில வரிகளை மாற்றி பிரமாணம் எடுக்கலாம் என சட்டத்துறை மந்திரி ஜஹித் ஹமீது சமீபத்தில் ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவர முயன்றார். இதற்கு பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் சில இஸ்லாமிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் ஜஹித் ஹமீது ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், ராவல்பிண்டி நகரில் இருந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு செல்லும் பிரதான சாலைகளில் கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக சில இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் பல லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. இதையடுத்து பாகிஸ்தான் போலீஸ் மற்றும் துணை ராணுவம், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தி விரட்டும் நடவடிக்கையை நேற்று முதல் ஆரம்பித்தது.

இந்த நடவடிக்கையின் போது, போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் மோதல் வெடித்தது. போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் போராட்டம் நடைபெற்ற இடம் போர்க்களமானது.

இந்த போராட்டத்தினால் ஏற்பட்ட கலவரங்களில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இதனால், பாகிஸ்தானில் அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டதை போன்ற சூழல் உருவாகியுள்ளது. 

இந்நிலையில், மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக பாகிஸ்தான் சட்டத்துறை மந்திரி ஜஹீத் ஹமீது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டு வருகின்றன.

comments powered by Disqus