தற்போதைய செய்திகள்

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனையை உறுதி செய்த நீதிபதி சோனியாவுக்கு கடிதம்
  • 17th November 2017

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனையை உறுதி செய்த நீதிபதி தாமஸ், சோனியாவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனையை உறுதி செய்த நீதிபதி தாமஸ், சோனியாவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் தண்டிக்கப்பட்டவர்களின் விடுதலைக்கு கருணை காட்ட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனையும், மேலும் 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி தாமஸ் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, 1999-ம் ஆண்டு, மே மாதம் 11-ந் தேதி உறுதி செய்தது.

இந்த தீர்ப்பில் நளினிக்கு நீதிபதி தாமஸ் மட்டும் ஆயுள் தண்டனை விதித்தார். ஆனால் பிற இரு நீதிபதிகளும் அதற்கு எதிராக தீர்ப்பு அளித்தனர். இருப்பினும், 2000-ம் ஆண்டில் நளினியின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்திக்கு நீதிபதி தாமஸ் (இப்போது ஓய்வு பெற்று விட்டார்.) ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அந்தக் கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட நபர்கள் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை சிறையில் கழித்து விட்டனர். எனவே அவர்களின் தண்டனையை குறைப்பதற்கு (விடுதலை செய்வதற்கு) நீங்களும், ராகுல் காந்தியும் (முடியுமானால் பிரியங்காவும் கூட) உங்கள் விருப்பத்தை தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினால், அதை அனேகமாக மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும்.

நீங்கள் மட்டுமே காட்டுகிற மனித நேயமாக இந்த உதவி அமையும் என்று தோன்றுகிறது. இவர்களுக்கு தண்டனை விதித்த நீதிபதி என்ற வகையில், இந்தக் கடிதத்தை உங்களுக்கு நான் எழுதவேண்டும் என்று உணர்கிறேன். எனவே நீங்கள், இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு கருணை காட்ட வேண்டும்.

இந்த கைதிகளுக்கு கருணை காட்டுவதின் மூலம்தான் சர்வ வல்லமை படைத்த கடவுளும் மகிழ்ச்சி அடைவார். உங்களுக்கு இந்த வேண்டுகோளை நான் விடுப்பதின்மூலம் நான் தவறு செய்திருந்தால், என்னை மன்னித்து விடுங்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

கடிதத்தில் தேசப்பிதா மகாத்மா காந்தி கொலை வழக்கில் குற்றச்சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில் நாதுராம் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சேயை, 14 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்த நிலையில் விடுதலை செய்வதற்கு 1964-ம் ஆண்டில் அப்போதைய மத்திய அரசு முடிவு எடுத்ததையும் நீதிபதி தாமஸ் சுட்டிக்காட்டி உள்ளார்.

comments powered by Disqus